புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கும், வன்முறை சம்பவங்களுக்கும் பாகிஸ்தானில் இருந்து பணம் வருகிறது. காஷ்மீரில் பயங்கரவாதி பர்கான் வானி கொல்லப்பட்டதும் கல்வீச்சு சம்பவங்கள் அதிகரித்தது. அப்போது கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர்கள் பேசும் உரையாடல் மீடியாக்களில் வெளியாகியது. பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து பணம் வந்ததும், அவை வன்முறையில் ஈடுபட்ட வாலிபர்களுக்கு வழங்கப்பட்டதும் தெரியவந்தது. இவ்விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது.
காஷ்மீரில் பயங்கரவாத நிதியகம் தொடர்பாக அதிரடி சோதனை மற்றும் கைது நடவடிக்கையில் தேசிய புலனாய்வு பிரிவு துரிதமாக செயல்படுகிறது. காஷ்மீர் பிரிவினைவாதிகளின் கூடாரம் இந்த பயங்கரவாத நிதியக சம்பவத்தில் வரிசையாக சிக்குகிறது.
பயங்கரவாத நிதியகம் தொடர்பாக பிரிவினைவாத தலைவர் கிலானியின் உதவியாளர் வழக்கறிஞர் தேவேந்தர் சிங் பேகல் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 30-ம் தேதி தேசிய புலனாய்வு பிரிவு சோதனையில் ஈடுபட்டது, அவரையும் கைது செய்தது. இதனையடுத்து அவரை ஜம்மு பார் கவுன்சில் நீக்கி உள்ளது. வழக்கறிஞராக இருக்கும் பேகல் அதிகமான வழக்குகளில் வாதிட்டது கிடையாது, ஆனால் அவருடைய வங்கி கணக்கில் ரூ. 35 லட்சம் ரொக்கம் உள்ளது, இதுதொடர்பாகவும் தேசிய புலனாய்வு பிரிவு விசாரிக்கிறது.
இதற்கிடையே கிலானியின் உதவியாளரான பேகல் பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யின் ஒரு ஏஜெண்ட் போன்று செயல்பட்டு உள்ளார் என்பது தெரியவந்து உள்ளது. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் பகுதியில் படைகள் நகர்வு உள்பட முக்கிய தகவல்களை தெரிவித்து உள்ளார். பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்து உள்ளார், தேசத்தின் ரகசிய தகவல்களை தெரிவித்து உள்ளார் என தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரி கூறிஉள்ளார். பிரிவினைவாத இயக்கங்களின் சட்ட குழுவில் செயல்பட்டு வரும் பேகல் காஷ்மீர் சுதந்திர கோஷங்களை வெளியிட்டு வந்ததும், பயங்கரவாதிகளின் உயிரிழப்பு வீணாக கூடாது என கூறிவந்ததும் தெரியவந்து உள்ளது.
பாகிஸ்தான் கொடியுடன், காஷ்மீர் சுந்திர கோஷம் எழுப்பியது, பயங்கரவாதிகள் உயிரிழப்பு வீண் போகாது என கோஷம் எழுப்பும் வீடியோவில் பேகல் பேசியது தெரியவந்து உள்ளது, இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.