காஜிப்பூர்,
பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் உள்ள காஜிப்பூர் நகரில் நடந்த மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டும் விழாவில் நேற்று முன்தினம் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து மகாராஜா சுஹேல்தேவ் நினைவாக அஞ்சல் தலை ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள செல்வதற்கு ராஷ்டீரிய நிஷாத் கட்சியை சேர்ந்தவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குரத்து பாதிப்பினை அக்கட்சியினர் ஏற்படுத்தினர்.
இந்த நிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட வாகனங்கள் திரும்பி கொண்டிருந்தன. அங்கு ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பினை சீர் செய்ய கான்ஸ்டபிள் சுரேஷ் வேட்ஸ் (வயது 48) என்பவர் சென்றுள்ளார். இதில் போராட்டக்காரர்கள் வீசிய கற்கள் அவர் மீது பட்டு அவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.
ஆனால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் பலனின்றி மரணம் அடைந்து விட்டார்.
இதற்கு முன் இதேபோன்று புலந்த்சாஹர் மற்றும் பிரதாப்கார் பகுதியில் போலீசார் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடைபெற்று உள்ளன.
இந்த நிலையில், பலியான சுரேஷின் உடல் இன்று பிரயாக்ராஜ் நகருக்கு இறுதி சடங்கிற்காக கொண்டு செல்லப்படுகிறது. இந்த சம்பவத்தில் 32 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், 27 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.