ஜம்மு,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவராக செயல்பட்டு வந்தார். அவரது பதவிகாலம் நிறைவடைந்ததையடுத்து கடந்த 15-ம் தேதி மாநிலங்களவை பொறுப்பில் இருந்து ஆசாத் ஓய்வு பெற்றார்.
இதற்கிடையில், மாநிலங்களவை பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற ஆசாத் 3 நாள் பயணமாக தனது சொந்த ஊரான ஜம்மு-காஷ்மீருக்கு சென்றுள்ளார். இந்நிலையில், ஜம்மு-வில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சார்பில் ஷாந்தி ஷமீலன் என்ற பெயரில் இன்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்குள் கட்டமைப்பு ரீதியில் மாற்றம் வேண்டும் என அக்கட்சியில் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்களில் பெரும்பாலானோர் ஜம்முவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற கபில் சிபல் கூறுகையில், உண்மை என்னவென்றால் காங்கிரஸ் வலுவிழந்து வருகிறது. ஆகையால் தான் நாம் இங்கு கூடியுள்ளோம். நாம் இதற்கு முன்பும் ஒன்று கூடியுள்ளோம். நாம் ஒன்றுகூடி கட்சியை வலுப்படுத்தவேண்டும்.
நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியின் களநிலவரத்தை தெரிந்துவைத்திருப்பவர்களில் குலாம்நபி ஆசாத். பாராளுமன்றத்தில் இருந்து அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என்பதை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. அவர் பாராளுமன்றத்தில் இருந்து ஓய்வுபெற நாங்கள் விரும்பவில்லை. அவரது அனுபவத்தை காங்கிரஸ் ஏன் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது எனக்கு புரியவில்லை என்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குலாம் நபி ஆசாத், ஜம்மு அல்லது காஷ்மீர் அல்லது லடாக் என எதுவாக இருந்தாலும் நாங்கள் அனைத்து மக்கள், மதம் மற்றும் ஜாதி ஆகியவற்றை மதிக்கிறோம். நாங்கள் அனைவரையும் சமமாக மதிக்கிறோம். இது தான் எங்கள் வலிமை நாங்கள் அதை தொடர்ந்து மேற்கொள்வோம் என்றார்.