டோக்கியோ,
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா (வயது 22) சிறந்த பங்காற்றி உள்ளார். இதுபற்றி அவரது தந்தை சதீஷ் குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, எங்களுடைய நம்பிக்கைகளை அவர் நிறைவேற்றுவார். எங்களது கிராமத்தில் போதிய வசதிகள் இல்லாத சூழலில் ஸ்டேடியத்திற்கு பேருந்தில் சென்றடைந்து பயிற்சிகளை மேற்கொள்வார் என உணர்ச்சி பெருக்குடன் கூறியுள்ளார்.
அரியானாவின் பானிபட் நகரில் நீரஜ் சோப்ராவின் குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டுக்காரர்கள் ஈட்டி எறிதல் இறுதி போட்டியை கண்டு, களித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இந்த நிலையில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில் 87.03 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து முதல் இடம் பிடித்து அசத்தினார். இதனால் டாப் 3 நபர்களில் அவர் முதல் இடத்திலும், 2வது இடத்தில் ஜூலியன் வெபர் மற்றும் 3வது இடத்தில் ஜாகுப் வாடிலெஜ் இருந்தனர். இதற்கடுத்த இடங்களில் பாகிஸ்தானின் நதீம் (82.40 மீ) மற்றும் பெலாரசின் மியாலேஷ்கா (82.28 மீ) ஆகியோர் இருந்தனர். ஜெர்மனியின் வெட்டர் (82.52 மீ) தொலைவுக்கு ஈட்டி எறிந்துள்ளார்.
தொடர்ந்து 2வது முயற்சியில் அவர் 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து மீண்டும் அசத்தினார். எனினும், 3வது முயற்சியில் 76.79 மீட்டர் தொலைவுக்கு சோப்ரா ஈட்டி எறிந்துள்ளார்.
விடெஜ்ஸ்லாவ் வெசெலி 85.44 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2வது இடம் பெற்றார். நதீம் 84.62 மீ தொலைவுடன் 4வது இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில், டாப் 8ல் நீரஜ் சோப்ரா முதல் இடத்திற்கு வந்துள்ளார். இதற்கு அடுத்து வெசெலி 2வது இடம், வெபர் 3வது இடம், நதீம் 4வது இடம், வாடிலெஜ் 5வது இடம், கட்காவெட்ஸ் 6வது இடம், லஸ்சி 7வது இடம் மற்றும் மர்டரே 8வது இடம் பிடித்து இருந்தனர்.
மொத்தமுள்ள 12 வீரர்களில் டாப் 8ல் உள்ளவர்களுக்கு, மூன்று முயற்சிகளுக்கு பின்னர் அடுத்து 3 முறை ஈட்டி எறியும் வாய்ப்பு அளிக்கப்படும்.
இந்நிலையில், 4வது சுற்றில் அவர் தவறு இழைத்து உள்ளார். அடுத்து 5வது சுற்றிலும் அவர் தவறு இழைத்து அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
எனினும் முதல் 4 பேரில் முதல் இடத்தில் சோப்ரா நீடித்து வருகிறார். 2வது இடத்தில் வாடிலெஜ், 3வது இடத்தில் வெசெலி உள்ளனர். இதனை தொடர்ந்து இறுதி சுற்று போட்டி தொடங்கியது. இதில், டாப் 3ல் இடம் பெற்ற வீரர்களுக்கு கூடுதலாக ஒரு முறை ஈட்டி எறியும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. எனினும் அதிக தொலைவுக்கு (87.58 மீட்டர்) ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா இறுதி போட்டியில் தங்க பதக்கம் வென்று அசத்தி உள்ளார். இதனால், இந்தியாவுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கம் கிடைத்து உள்ளது. இதனை அவரது சொந்த ஊர் மக்கள் உற்சாகமுடன் கொண்டாடி வருகின்றனர்.
அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ஈட்டி எறிதலில் பெற்ற உங்களுடைய தங்க பதக்கம், தடைகளை உடைத்து வரலாறு படைத்து உள்ளது.
உங்களுடைய முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே நாட்டுக்கு தங்க பதக்கம் வென்று தந்துள்ளீர்கள். உங்களுடைய தடம் இளைஞர்களுக்கு ஊக்கம் ஏற்படுத்தும். இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. என்னுடைய மனப்பூர்வ வாழ்த்துகள் என்று தெரிவித்து உள்ளார்.