தேசிய செய்திகள்

துபாயில் இருந்து பெங்களூருவுக்கு நூதன முறையில் தங்கம் கடத்திய நபர் கைது

துபாயில் இருந்து பெங்களூருவுக்கு நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ.5¾ லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு: துபாயில் இருந்து பெங்களூருவுக்கு நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகள் சோதனை

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள். குறிப்பாக துபாயில் இருந்து வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் உண்டானது. இதையடுத்து, அவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது உடைமைகளிலும் சோதனை செய்யப்பட்டன. ஆனால் அவரிடம் எந்த தங்க நகைகளும் கிடைக்கவில்லை. ஆனால் அந்த நபர் சரியாக நடந்து செல்ல முடியாதபடி சென்றார். இதையடுத்து, அந்த நபர் அணிந்திருந்த ஷூவை கழற்றி பார்த்தார்கள்.

கால்களின் பாதத்தில் தங்கம்

அப்போது 2 கால்களின் பாதத்திலும் பேண்டேஜ் ஒட்டி இருந்தார். கால்களில் காயம் இருப்பதால் பேண்டேஜ் ஒட்டி இருப்பதாக அந்த நபர் கூறினார். 2 கால்களில் காயம் இருக்க வாய்ப்பில்லை என்பதால் சந்தேகத்தின் பேரில் பேண்டேஜை கழற்றிய போது, அதற்குள் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 2 கால்களின் பாதத்திலும் பேண்டேஜ் ஒட்டி, அதற்குள் தங்கத்தை மறைத்து வைத்து நூதன முறையில் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த நபரை போலீசார் கைது செய்தார்கள். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான வாலிபர் மீது தேவனஹள்ளி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.