மங்களூரு;
வெளிநாடுகளில் இருந்து...
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வெளிநாடுகளுக்கும், டெல்லி, மும்பை போன்ற பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள், தங்கம் போன்றவை கடத்தப்படுவதும், அவர்களை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதும் தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் துபாயில் இருந்து மங்களூருவுக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்திறங்கியது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ரூ.31 லட்சம் தங்கம்
அப்போது ஒரு பயணி மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அதிகாரிகள் அந்த பயணியை தனியாக அழைத்து சென்று அவருடைய உடைமைகளில் சோதனை நடத்தினர். அப்போது அதில் தங்கம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்து 602 கிராம் எடை கொண்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா. அதன் மதிப்பு ரூ.31 லட்சம் ஆகும்.
பின்னர் அவர்கள் அந்த பயணியை பஜ்பே போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.