புதுடெல்லி,
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் 2 நாள்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி ஏற்ற பின்னர், முதன்முறையாக அவர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
முன்னதாக ஆண்டனி பிளிங்கன் இன்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்கிறது. கொரோனா ஆரம்ப காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை சந்தித்தபோது இந்தியா உதவியது. தற்போது இந்தியாவிற்கு உதவுவதில் அமெரிக்கா பெருமைக்கொள்கிறது என்று தெரிவித்தார். மேலும் ஆண்டனி பிளிங்கன், இந்தியாவுக்கு 40 ஆண்டுகளுக்கு முன் தனது குடும்பத்துடன் வந்திருந்ததாகவும், தற்போது மீண்டும் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ஆண்டனி பிளிங்கன் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஆண்டனி பிளிங்கனுடனான சந்திப்பு மகிழ்ச்சியளிக்கிறது என்றும் இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியாக இருப்பதை தான் ஆதரிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.