புதுடெல்லி,
துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவி காலம் வருகிற ஆகஸ்டு மாதம் 10ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து துணை ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. ஜனாதிபதி தேர்தலை போல் துணை ஜனாதிபதி தேர்தலிலும், பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்தது. துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
துணை ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மாநாட்டு கட்சி, சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் உள்பட 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தின.
டெல்லியில் இன்று கூட்டம் தொடங்கியதும் அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கோபாலகிருஷ்ண காந்தியின் பெயரை ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவித்தன. ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டது. கூட்டத்தின் போது எதிர்க்கட்சிகள் சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தியை போட்டியிட செய்ய 18 கட்சிகள் முடிவு செய்தன. நாங்கள் அவரிடம் பேசினோம். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அவர் சம்மதித்துவிட்டார், என்றார்.