ஐதராபாத்,
ஆப்கானிஸ்தான் தங்கள் வசப்படுத்தியுள்ள தலீபான்களுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்க வேண்டும் என்று ஐதராபாத் எம்.பியும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதின் ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஓவைசி கூறியதாவது:- ஆப்கானிஸ்தானை தலீபான்கள் முழுமையாக தங்கள் வசம் கொண்டு வருவதற்கு முன்பே இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்யப்படாத இடங்கள், ஐஎஸ்.ஐஎஸ், அல்கொய்தா போன்ற பயங்கரவாத இயக்கங்களால் பயன்படுத்தப்படும். இது இந்தியாவுக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும்.
தலீபான்களை இந்தியா அங்கீகரிக்கிறதோ இல்லையோ எப்படியிருந்தாலும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வழிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நாம் நேரத்தை இழந்து கொண்டிருக்கிறோம். ஆப்கானிஸ்தானை மறுகட்டமைப்பு செய்ய இந்தியா ஏறத்தாழ 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தை நாம் கட்டிகொடுத்துள்ளோம். சமீபத்தில் பிரதமர் மோடியும் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானியும் தான் அதை திறந்துவைத்தனர்.
தற்போது ஆப்கானிஸ்தான் முழுமையாக தலீபான்கள் கட்டுக்குள் வந்துள்ளது. அவர்களுடன் நமக்கு எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும் என அனைத்து சர்வதேச பாதுகாப்பு நிபுணர்களும் கூறினர். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக அங்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது என்றார்.