முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று தனது டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:-
நிவாரணம் வழங்க வேண்டும்
கர்நாடகத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏற்கனவே கொரோனா காரணமாக மக்களும், விவசாயிகளும் மிகுந்த சிரமத்தையும், நஷ்டத்தையும் அனுபவித்து வந்திருந்தனர். தற்போது மாநிலம் முழுவதும் இடைவிடாமல் பெய்து வரும் மழையால் விவசாயிகள் பயிரிட்டு இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்துள்ளது. தங்களது கண்முன்னே பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
மழையால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கடந்த ஜூலை மற்றும் இந்த மாதம் (நவம்பர்) பெய்த கனமழைக்கு 7 லட்சத்து 31 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் பயிரிட்டு இருந்த பயிர்கள் நாசம் அடைந்திருப்பது பற்றி தகவல்கள் வந்துள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
மந்திரி எங்கு இருக்கிறார்?
கொரோனாவில் இருந்து மீள்வதற்குள் மழையால் மக்கள் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் விவசாயத்துறை மந்திரி எங்கு இருக்கிறார்?, மாவட்ட பொறுப்பு மந்திரிகள் எங்கு சென்றார்கள்? என்பதே தெரியவில்லை. மந்திரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை அரசு எந்த உதவியும் செய்து கொடுக்கவில்லை. வருவாய்த்துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. சிக்கமகளூரு, குடகில் காபி தோட்டங்களும் மழையால் சேதம் அடைந்துள்ளன. எனவே நிவாரணம் வழங்கும் விவகாரத்தில் அரசு இனிமேலும் தாமதிக்க கூடாது. விவசாயிகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.