திருவனந்தபுரம்,
திருவனந்தபுரத்தில் சபாநாயகர் எம்.பி.ராஜேஷ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சபாநாயகர் எம்.பி. ராஜேஷ் கூறியதாவது:-
15-வது கேரள சட்டசபையின் முதல் கூட்டம் 24-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அன்று புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர். மறுநாள் புதிய சபாநாயகர் தேர்தல் நடந்தது.
2 நாள் இடைவெளிக்கு பின் சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) கூடுகிறது. சட்டசபையில் கவர்னர்ஆரிப் முகமது கான் உரையாற்றுகிறார். இந்த கூட்டம் ஜூன் 14-ந் தேதி வரை நடைபெறும். இந்த கூட்டத்தில் லட்சத்தீவில் தற்போது நிகழ்ந்து வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் முழு அதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஷாபி பரம்பில் உள்பட உறுப்பினர்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.