தேசிய செய்திகள்

கொரோனா பாதித்தவர்களுக்கு செலுத்தப்படும் ‘ரெம்டெசிவர்’ மருந்தை தனி விமானத்தில் புதுவைக்கு கொண்டு வந்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ‘ரெம்டெசிவர்’ மருந்தை தனி விமானத்தில் ஐதராபாத்தில் இருந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவைக்கு கொண்டு வந்தார்.

தினத்தந்தி

ரெம்டெசிவர்

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் என்ற மருந்து செலுத்தப்படுகிறது.அந்த மருந்துக்கு புதுவையில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அந்த மருந்து பெற்று வர நடவடிக்கை எடுத்தார்.இந்த நிலையில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு ஐதராபாத் சென்ற அவர் நேற்று மாலை தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்தார். அப்போது ரெம்டெசிவர் மருந்து 1000 டோசை கையோடு எடுத்து வந்தார். புதுச்சேரி விமான நிலையத்தில் அந்த மருந்தை சுகாதாரத்துறை செயலர் அருணிடம் ஒப்படைத்தார்.

பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தட்டுப்பாடு

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுப்பது தொடர்பாக உயர்அதிகாரிகளுடன் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில், கொரோனா பாதித்து தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்து புதுவையில் முற்றிலும் தீர்ந்து, தட்டுப்பாடு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த மருந்து ஐதராபாத்தில் தான் தயாரிக்கப்படுகிறது. இதே போன்ற தட்டுப்பாடு தமிழகத்தில் வந்த போது ஐதராபாத்தில் இருந்து அவர்களுக்கு உதவினோம்.

1000 டோஸ்

இந்த நிலையில் யுகாதி பண்டிகையை கொண்டாட தெலுங்கானா மக்கள் எனக்கு அழைப்பு விடுத்தனர். எனவே அங்கு சென்று அந்த மக்களுடன் சேர்ந்து யுகாதி பண்டிகையை கொண்டாடினேன். அப்போது ரெம்டெசிவர் மருந்தை புதுவைக்கு பெற ஐதராபாத் நிறுவனத்திடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்தேன். அத்துடன் மத்திய சுகாதாரத்துறை மற்றும் தெலுங்கானா சுகாதாரத்துறையிடம் பேசினேன். தெலுங்கானா முதல்-மந்திரியும் உதவினார். தற்போது 1000 டோஸ் ரெம்டெசிவர் மருந்து புதுவைக்கு கிடைத்தது. அதனை கையோடு விமானத்தில் எடுத்து வந்தேன். இந்த மருந்து மேலும் தேவைப்பட்டால் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். அவர்களும் கொடுப்பதாக கூறியுள்ளனர்.ரெம்டெசிவர் மருந்தை கள்ள சந்தையில் விற்பனை செய்வது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்