தேசிய செய்திகள்

கர்நாடக நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை

கர்நாடக நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு, அம்மாநில கவர்னர் அறிக்கை அளித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

பெரும்பான்மையை நிரூபிக்க விதித்த 2 கெடுவையும் குமாரசாமி மீறிய விவகாரம் மற்றும் கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து மத்திய உள்துறையிடம் கவர்னர் வஜூபாய் வாலா அறிக்கை அளித்துள்ளார்.

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் அங்கீகரிக்கவில்லை. அதே நேரத்தில் அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் திரும்ப பெற்றுள்ளனர். இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும், முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பா.ஜனதாவினர் வலியுறுத்தினர்.

இதற்கிடையே கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. கடந்த 18-ந்தேதி தனது அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்-மந்திரி குமாரசாமி கொண்டு வந்தார். அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தின் மீது கடந்த 18 மற்றும் 19-ந்தேதிகளில் விவாதம் மட்டுமே நடந்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நீண்டு கொண்டே சென்றதால் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோரி கவர்னர் விதித்த 2-வது கெடுவையும் முதல்-மந்திரி குமாரசாமி மீறி விட்டார்.

அதேநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க கோரி கவர்னர் விதித்த உத்தரவை எதிர்த்து முதல்-மந்திரி குமாரசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், கர்நாடகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலை மற்றும் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது பற்றியும் மத்திய உள்துறையிடம் கவர்னர் வஜூபாய் வாலா அறிக்கை அளித்துள்ளார். அதாவது மத்திய உள்துறை செயலாளருக்கு கவர்னர் அறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த அறிக்கையில் கூட்டணி அரசில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பதுடன், தங்களது ஆதரவு பா.ஜனதாவுக்கு என்று கூறி என்னிடம் கடிதம் வழங்கியுள்ளனர். இதன் காரணமாக கூட்டணி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்-மந்திரி குமாரசாமிக்கு 2 முறை கெடு விதிக்கப்பட்டது. நான் விடுத்த 2 கெடுவையும் அவர் மீறி விட்டார்.

கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டதாலும், கர்நாடகத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண அரசியல் சூழ்நிலையிலும் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும். மத்திய அரசு தலையிட்டு கர்நாடகத்தில் நிலவும் அசாதாரண நிலைக்கு தீர்வு காண வேண்டும் என்று கவர்னர் வஜூபாய் வாலா தெரிவித்துள்ளார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?