மகாராஷ்டிராவில் தானே நகரில் மொகடா தாலுகாவை சேர்ந்த கிராமவாசி புஜார் மாலி. இவரது வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் வந்து சேர்ந்துள்ளது. பிரதமர் மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார் என கருதி அதில் ரூ.2.5 லட்சத்தினை புஜார் செலவு செய்து விட்டார்.
ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்ததில் முதல் தவணையாக இந்த பணம் செலுத்தப்பட்டு உள்ளது என அவர் கருதியுள்ளார்.
இந்நிலையில், பழங்குடியினரின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் அமைப்பு ஒன்று உள்ளூர் அரசு பள்ளி கூட பராமரிப்பை வலியுறுத்தி போராட்டம் ஒன்றை நடத்தியது.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பள்ளி கூடத்தினை சரி செய்வதற்காக அனுப்ப வேண்டிய பணம் தவறுதலாக புஜாரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது தெரிய வந்தது. அதன்பின், நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள் வங்கியிடம் புஜாரின் வங்கி கணக்கை முடக்கும்படி கூறினர்.
இந்நிலையில், அரசு நிர்வாகம் புஜாரிடம் இருந்து பணத்தினை திரும்ப பெறுவதற்கு பழங்குடி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த செய்தி மாவட்டம் முழுவதும் பரவியது. பிரதமரின் வாக்குறுதியின்படி ரூ.15 லட்சம் கிடைக்கும் என மற்ற பழங்குடியினரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழைக்கும் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என கடந்த 2014 பொது தேர்தலில் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார்.