புதுடெல்லி,
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார்க், கர்நாடகா, மிசோரம், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டும், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அடுத்த ஆண்டு முதலிலும் தேர்தல் நடைபெற உள்ளது. பாரதீய ஜனதா அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் என்ற நிலையில் பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் கல்வித்துறைக்கு முக்கிய அறிவிப்புக்கள் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி அரசில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவிற்கு என்று மத்திய பட்ஜெட்டில் எந்தஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என விமர்சனம் செய்து உள்ளது. ஆந்திராவின் புதிய தலைநகராக அறிவிக்கப்பட்டு உள்ள அமராவதி தொடர்பாக எந்தஒரு அறிவிப்பும் வெளியாகாதது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட திட்டம் மற்றும் சலுகை எதுவும் பட்ஜெட் உரையில் இடம்பெறவில்லை என அம்மாநில அமைச்சர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் பட்ஜெட் என சிவசேனா விமர்சனம் செய்து உள்ளது.
சிவசேனா எம்.பி. அரவிந்த் சவந்த் பேசுகையில், தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் பட்ஜெட். அதனால், தொழில்துறையில் இருந்து விவசாயம், சுகாதாரம், கல்வி ஆகியவை மீது அரசு கவனம் செலுத்தி உள்ளது என கூறி உள்ளார்.
பக்கோடா பட்ஜெட்
வேலைவாய்ப்பு பற்றியோ, விவசாய கடன் தள்ளுபடி பற்றியோ பட்ஜெட்டில் எதுவுமே இல்லை. இது, ஒரு பக்கோடா பட்ஜெட், என
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் விமர்சனம் செய்து உள்ளார்.
இந்த பட்ஜெட், ஒரு சூப்பர் பிளாப். முடிவடையும் தருவாயில் உள்ள அரசின் மரண வாக்குமூலம் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஓ பிரையன் விமர்சித்து உள்ளார்.