தேசிய செய்திகள்

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் பற்றி மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்: சோனியா காந்தி

கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, அந்த மோதலுக்கான சூழ்நிலை குறித்து மக்களுக்கு மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.

அஞ்சலி

கிழக்கு லடாக்கில், கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவினர். அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15-ந் தேதிக்கும், 16-ந் தேதிக்கும் இடையிலான நள்ளிரவு நேரத்தில் இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய வீரர்கள் 20 பேர் பலியானார்கள்.இச்சம்பவம் நடந்து நேற்று ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடனான மோதலில் பலியான 20 இந்திய வீரர்களுக்கு தேசத்துடன் இணைந்து அஞ்சலி செலுத்துகிறேன். எல்லையில் நடந்த சீன அத்துமீறல் குறித்து இன்னும் தெளிவு வரவில்லை. மத்திய அரசு இதை தெளிவுபடுத்தும் என்றும், மோதலுக்கான சூழ்நிலையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் என்றும், வீரர்களின் தியாகம் வீண்போகாது என்று உறுதி அளிக்கும் என்றும் ஓராண்டாக காங்கிரஸ் கட்சி பொறுமையாக காத்திருந்தது.

இந்தியாவுக்கு பாதகம்

ஆனால், மத்திய அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை. எந்த ஊடுருவலும் நடக்கவில்லை என்று பிரதமர் கடைசியாக கூறினார். அவரது வார்த்தை அடிப்படையில், மோதல் தொடர்பான விவரங்களையும், எல்லையில் முந்தைய நிலைமையை நிலைநிறுத்த எடுத்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.எனவே, இந்த விவகாரத்தில் மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும். சீனாவுடன் செய்து கொண்ட படைவிலக்கல் ஒப்பந்தம், இதுவரை முற்றிலும் இந்தியாவுக்கு பாதகமாகவே செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ராகுல்காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் பலியான 20 இந்திய வீரர்களை தேசத்துடன் இணைந்து நினைவுகூர்கிறேன். இந்த பிரச்சினையில் விடை கிடைக்காத கேள்விகள் நிறைய இருக்கின்றன. அதுதொடர்பாக மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அமரீந்தர்சிங், காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோரும் டுவிட்டர் பக்கத்தில் 20 இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...