ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 
தேசிய செய்திகள்

பாதுகாப்பு-விண்வெளித்துறையில் தொழில் முதலீட்டாளர்களுக்கு அதிக வாய்ப்பு; பெங்களூரு விமான கண்காட்சி நிறைவு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பெருமிதம்

மத்திய அரசு கடந்த 6 ஆண்டுகளில் மேற்கொண்ட சீர்திருத்தங்களால் பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் தொழில் முதலீட்டாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது என்று பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி நிறைவு விழாவில் பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

தினத்தந்தி

மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் 13-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரு எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது.

கொரோனா பரவல்

ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த விமான கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள் கலந்துகொண்டன. அந்த விமானங்கள் வானில் சாகசம் நடத்தின. வானில் வட்டமடித்தும், குறுக்கும், நெடுக்குமாக வந்தும், செங்குத்தாக பறந்தும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன. கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வணிக ரீதியிலான பார்வையாளர்கள் மட்டுமே கண்காட்சியை காண அனுமதிக்கப்பட்டனர்.

இலகுரக போர் விமானங்கள்

இந்த கண்காட்சியில் 24 நாடுகள் கலந்துகொண்டன. 16 நாடுகள் ஆன்லைனில் பங்கேற்றன. பல்வேறு நாடுகளின் ராணுவ மந்திரிகள் கலந்துகொண்ட மாநாடு நடைபெற்றது. இதில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு பேசினார். இதில் பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. எச்.ஏ.எல். நிறுவனத்துடன் இந்திய விமானப்படை 83 இலகுரக போர் விமானங்களை கொள்முதல் செய்யும் ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இதையடுத்து விமான கண்காட்சியின் கடைசி நாளான நேற்று நிறைவு விழா நடைபெற்றது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

இந்தியா தன்னிறைவு

இந்த விமான கண்காட்சி, பாதுகாப்புத்துறையில் இந்தியா தன்னிறைவு அடைய உதவும். இது இந்தியா மீது உலக நாடுகள் வைத்துள்ள நம்பிக்கையை மேலும் அதிகரிப்பதை வெளிப்படுத்துகிறது. கொரோனாவால் ஏற்பட்ட சவால்களுக்கு மத்தியிலும், இந்த விமான கண்காட்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி இயல்பான தன்மையில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்படாமல் இந்த நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்திய வான் எல்லையை பாதுகாப்பதில் விமானப்படை வீரர்களின் துணிச்சல் பாராட்டுக்குரியவை. உலகிலேயே முதல் முறையாக ஆன்லைன் மூலமாக இத்தகைய விமான கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் உலகின் பல்வேறு நாடுகள் கலந்து கொண்டன. பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது தான் நமது தொலைநோக்கு

திட்டம். அத்துடன் சங்கிலித்தொடர் தளவாடங்கள் மற்றும் பொருட்களை உற்பத்தி செய்து, அதை உலக நாடுகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும்.

ஏற்றுமதியை ஊக்குவித்தல்

மத்திய அரசு கடந்த 6 ஆண்டுகளுக்கு மேற்கொண்ட சீர்திருத்தங்கள், பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் தொழில் முதலீட்டாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடைதல், ஏற்றுமதியை ஊக்குவித்தல் ஆகிய 2 நோக்கங்களுடன் இந்தியா முன்னணி நாடுகளின் பட்டியலில் இடம் பிடிக்க கொள்கை ரீதியாக பல்வேறு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ரூ.48 ஆயிரம் கோடி செலவில் 83 தேஜஸ் போர் விமானங்களை கொள்முதல் செய்ய எச்.ஏ.எல். நிறுவனத்துடன் விமானப்படை ஒப்பந்தம் செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினா.

16 ஆயிரம் பேர்

இதைதொடர்ந்து விழாவில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பேசும்போது கூறுகையில், "கொரோனா பரவலுக்கு மத்தியிலும் இந்த விமான கண்காட்சி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 16 ஆயிரம் பேர் நேரடியாக கலந்து கொண்டனர். ஆன்லைனில் 4.5 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் 45 சிறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த நிறுவனங்களுக்கு ரூ.203 கோடி ஒப்பந்தம் கிடைத்துள்ளன" என்றார்.

இதில் முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு பிறகு, விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ராம்நாத் கோவிந்த் பார்த்து மகிழ்ந்தார். இந்த கண்காட்சியில் 540 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 84 நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தன. மொத்தம் 201 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்