அமிர்தசரஸ்,
பஞ்சாப் மாநில தலைநகர் அமிர்தசரசுக்கு அருகே ராஜாசான்சி பகுதி உள்ளது. இங்கு குறிப்பிட்ட ஒரு மதப்பிரிவினரின் வழிபாட்டு தலம் (நிரங்கரி பவன்) இயங்கி வருகிறது.
அந்த கட்டிடத்தில் நேற்று முன் தினம் காலையில் 200க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர், தாங்கள் கொண்டு வந்திருந்த கையெறி குண்டு ஒன்றை எடுத்து திடீரென வழிபாட்டு தலத்தை நோக்கி வீசினர். அது மக்கள் கூட்டத்தில் போய் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிரங்கரி பவனில் கையெறி குண்டு வீசப்பட்ட தகவல் அறிந்ததும் அமிர்தசரஸ் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது.
பாகிஸ்தான் மீது சந்தேகம்
இந்த நிலையில், முதல்வர் அமரிந்தர் சிங் குண்டு வெடிப்பு இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், நிராங்கரி பவன் பிரார்த்தனை கூடத்தில் வீசப்பட்ட கையெறி குண்டுகள் பாகிஸ்தான் அடையாளங்கள் காணப்படுகின்றன. அந்த குண்டுகள் பாகிஸ்தான் ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை என்ற சந்தேகம் எழுகிறது.
பிரிவினைவாத குழுக்களான ஐ.எஸ்., காலிஸ்தான் பயங்கர்வாதிகள் அல்லது காஷ்மீர் பயங்கரவாத கும்பல் ஆகியவைகளுக்கு இந்த தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம் தேசிய புலனாய்வு முகமைக்குழு விசாரணை அதிகாரிகளும் வெடி குண்டு நிபுணர்களும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.