தேசிய செய்திகள்

மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு - நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பது என நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த வரி குறைப்பு ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மின்சார வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைப்பது என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த வரி குறைப்பு ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்கும் நோக்கில் மத்திய அரசு ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தி உள்ளது. இந்த ஜி.எஸ்.டி. அமலாக்கத்தை கண்காணிக்கவும், அதில் மாற்றங்களை செய்வதற்காகவும் மாநில நிதி மந்திரிகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக் கப்பட்டு உள்ளது. மத்திய நிதி மந்திரி தலைமையிலான இந்த கவுன்சில் அடிக்கடி கூடி ஜி.எஸ்.டி. குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

அந்தவகையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 36-வது கூட்டம் நேற்று நடந்தது. காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையேற்று நடத்தினார். இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில் முக்கியமாக சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வாகன இயக்கத்தை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி.யை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் அனைத்து வகையான மின்சார வாகனங்களின் ஜி.எஸ்.டி. விகிதத்தை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதைப்போல மின்சார வாகனங்களுக்கான சார்ஜர் மற்றும் சார்ஜிங் நிலையங்களுக்கான வரி விகிதமும் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும் 12 பேருக்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்செல்லும் மின்சார வாகனங்களை உள்ளூர் அதிகாரிகள் வாடகைக்கு அமர்த்துவதற்கு ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை கவுன்சில் ஏற்றுக்கொண்டது. இதன்மூலம் இந்த வாகனங்களை வாடகைக்கு அமர்த்த ஜி.எஸ்.டி. ரத்தாகிறது.

இந்த வரி குறைப்பு அனைத்தும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் ஜி.எஸ்.டி. கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

முன்னதாக, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன்படி மின்சார வாகனங்களின் குறிப்பிட்ட பாகங்களுக்கு சுங்க வரி ரத்து, மின்சார வாகனங்கள் வாங்குவதற்கான கடனுக்கு வருமான வரி சலுகை போன்ற பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைத்தவிர வினியோகஸ்தர் சேவைகளுக்கான வரியை தவிர்த்த பிற வரிகளுக்கான ஜி.எஸ்.டி. சி.எம்.பி.02 படிவம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ந்தேதி வரை நீட்டிக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டது. மேலும் ஜூன் வரையிலான காலாண்டுக்குரிய சுய கணக்கு அறிக்கை தாக்கல் செய்யும் ஜி.எஸ்.டி. சி.எம்.பி.08 படிவம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவும் ஆகஸ்டு 31-ந்தேதி வரை நீட்டிகப்பட்டது.

இந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் மீன்வளம் மற்றும் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், கூடுதல் தலைமை செயலாளர் சோமநாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், தமிழகத்தால் முன்வைக்கப்பட்டு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி குறைப்பு மற்றும் வரி விலக்கு தொடர்பான கோரிக்கைகள் மீது விரைந்து முடிவு எடுக்குமாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கோரிக்கை விடுத்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு