தேசிய செய்திகள்

ஜி.எஸ்.டி. வரிமுறைக்கு சென்ற பாதை சுமுகமாக இருந்தது -ஜனாதிபதி பாராட்டு

நாடு ஜி.எஸ்.டி. வரிமுறைக்கு சென்ற பாதை சுமுகமாக இருந்தது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டினார்.

புதுடெல்லி,

சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு டெலிவிஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

பங்களிப்பு அவசியம்

அரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலன்கள் சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதி செய்ய நாம் உண்மையுடன் ஒருமித்து பணியாற்ற வேண்டும். இதற்கு அரசுக்கும், குடிமக்களுக்கும் இடையிலான பங்களிப்பு மிகவும் அவசியம். அரசு தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கி இருக்கிறது. அந்த இயக்கத்தை வெற்றி பெறச்செய்வது நமது கைகளில்தான் இருக்கிறது.

அரசு கழிப்பறைகளை கட்டித்தருகிறது அல்லது கட்டுவதற்கு உதவுகிறது. இவற்றை ஒவ்வொருவரும் பயன்படுத்த செய்வதும், திறந்தவெளியை கழிப்பிடமாக மாற்றுவதை தவிர்க்க செய்வதும் நம் அனைவரின் கடமையாகும்.

தகவல் தொடர்பு கட்டமைப்பை அரசு அமைத்து தருகிறது. இந்த இணையதள வசதிகளை சரியான நோக்கத்திற்கு பயன்படுத்துவதும், அறிவாற்றல் இடைவெளியை போக்குவதற்கும் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் கல்வியிலும், தகவல் தொடர்பிலும் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இதை நாம் பயன்படுத்தவேண்டும்.

பெண்களுக்கு சிறந்த கல்வி

பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்ற திட்டங்களை அரசு முன்னெடுத்து செல்கிறது. நமது பெண் குழந்தைகளை பாகுபாடு காட்டாமல் பாதுகாத்து அவர்கள் சிறந்த கல்வி பெறச் செய்யவேண்டும்.

அரசு சட்டங்களை வகுக்க முடியும், அதை அமலாக்க முடியும், ஆனால் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பது நமது கடமை. இதேபோல் சட்டத்தை மதித்து நடக்கும் சமுதாயத்தை கட்டமைப்பதும் நமது கடமைகளுள் ஒன்று.

அரசு பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்வதிலும், கொள்முதலிலும் ஊழலை ஒழிக்க, ஒளிவுமறைவற்ற தன்மையை அரசு முன்னெடுத்து செல்கிறது. இந்த கொள்கைகள் நிறைவேற நமது மனசாட்சிக்கு ஒவ்வொரு நாளும் பதிலளிக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி.யால் மகிழ்ச்சி

பல்வேறு வரிமுறைகளில் இருந்த சிக்கலை போக்கி எளிய முறையில் பரிமாற்றம் செய்வதற்காக அரசு சரக்கு சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.) முறையை அமல்படுத்தி வருகிறது. அதை நமது ஒவ்வொரு பரிமாற்றத்திலும், வர்த்தக கலாசாரத்திலும் பின்பற்றுவது நம் அனைவரையும் சாரும்.

நாடு ஜி.எஸ்.டி. வரி முறைக்கு சென்ற பாதை சுமுகமாக இருந்தது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் செலுத்தும் வரி நாட்டின் கட்டமைப்பு, ஏழைகள், ஒடுக்கப்பட்டோருக்கு உதவிடவும், கிராமப்புற நகர்ப்புற கட்டமைப்புக்கும், நமது எல்லை பாதுகாப்புக்கும் பயன்படுகிறது என்பதில் நாம் பெருமிதம் கொள்வோம்.

2022-ம் ஆண்டில் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. புதிய இந்தியாவை படைப்பதற்கு சில மைல் கற்களை நாம் அதற்குள் சாதிக்கவேண்டும் என்பது தேசிய உறுதிப்பாடாக இருக்கவேண்டும்.

இன்று உலகமே இந்தியாவை அதிசயித்து உற்றுநோக்குகிறது. வளரும் பொருளாதாரத்தை கொண்டதாக, பருவநிலை மாற்றம், பேரழிவு, மோதல்கள், மனித குல நெருக்கடி, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்ற பல்வேறு சர்வதேச சவால்களுக்கு தீர்வு காண்பதில் பொறுப்பான உலக உறுப்பினராக நம்மை உலகம் பார்க்கிறது.

ஒலிம்பிக்கிற்கு தயார் படுத்துவோம்

உலகின் கண்களில் நமது நிலை உயர்வதற்கு 2020-ல் நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் மற்றுமொரு நல்வாய்ப்பாகும். இதற்கான முயற்சியில் அடுத்த மூன்றாண்டுகள் நம்மை நாம் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

திறமைமிக்க விளையாட்டு வீரர்களையும், வீராங்கனைகளையும் அடையாளம் கண்டு அவர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை நமது அரசும், விளையாட்டு அமைப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் ஒன்றுபட்டு செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...