பெங்களூரு,
கர்நாடகத்தின் பாரம்பரியமிக்க மைசூரு தசரா விழா உலக பிரசித்தி பெற்றதாகும். மன்னர் காலத்தில் இருந்தே கொண்டாடப்படும் இந்த விழா வரலாற்று சிறப்பு மிக்கது. மைசூரு மாகாணத்தை ஆண்ட மன்னர் கிருஷ்ண தேவராயர் போரில் எதிரிகளை வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் தசரா விழா கொண்டாடப்பட்டது. அவரது மறைவுக்கு பின்னர் மைசூருவை ஆட்சி செய்த யது வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் தசரா விழாவை கொண்டாட தொடங்கினார்கள்.
இருப்பினும் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் ஆட்சி காலத்தில் தான் மைசூரு தசரா விழா உலகமே அறிந்துகொள்ளும் வகையில் உற்சாகமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டது. அவரது மறைவுக்கு பின்னர் ஜெயசாமராஜேந்திர உடையாரும் தசரா விழாவை பிரமாண்டமாக நடத்தி வந்தார். அவரது ஆட்சி காலத்துக்கு பிறகு 1972-ம் ஆண்டில் இருந்து கர்நாடக அரசு சார்பில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மைசூரு தசரா விழாவுக்கு மற்றொரு வரலாறும் இருப்பதாக புராணங்கள் கூறுகிறது. சாமுண்டீஸ்வரி அம்மன், மக்களை கொடுமைப்படுத்தி வந்த மகிஷாசூரனை வதம் செய்த நாளே தசரா விழாவாக கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 7-ந் தேதி (நாளை) தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. இது 411-வது தசரா விழாவாகும். தசரா தொடக்க விழா மைசூரு சாமுண்டிமலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நாளை(வியாழக்கிழமை) காலை 8.15 மணியில் இருந்து 8.45 மணிவரை நடைபெற இருக்கிறது.
இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில், முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து மலர் தூவுவதன் முலம் தசரா விழாவை தொடங்கிவைக்கிறார். இதில் மந்திரிகள் எஸ்.டி.சோமசேகர், ஆர்.அசோக், கோவிந்த் கார்ஜோள், சுதாகர் உள்பட மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் பகாதி கவுதம் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். இதையொட்டி மைசூரு அரண்மனையில் மன்னர் யதுவீர் நாளை முதல் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்துகிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் வருகிற 15-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் மதியம் 2.45 மணியில் இருந்து 3.15 மணியளவில் ஜம்பு சவாரி ஊர்வலம் தொடங்கப்படும். இதில் அபிமன்யு யானை சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ தங்க அம்பாரியை சுமந்து செல்லும். அதையடுத்து மற்ற யானைகளும், கலைக்குழுவினரும் செல்ல உள்ளனர்.
இந்த நிலையில் மைசூரு தசரா விழா கொண்டாட்டம் தொடர்பாக கர்நாடக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை உள்ளடக்கி ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
மைசூரு தசரா விழாவில் கலந்து கொள்ளும் அதிகாரிகள் அனைவரும் ஆர்.டி.பி.சி.ஆர். முறையில் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். கலைஞர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், ஊடகத்தினர் அனைவருக்கும் இந்த விதிமுறை பொருந்தும். இந்த பரிசோதனை 4-ந் தேதிக்கு பிறகு எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி ஆவது போட்டு இருக்க வேண்டும்.
கொரோனா பரிசோதனை மேற்கொள்வதில் கலைஞர்கள், கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த நிகழ்ச்சியை நடத்துகிறவர்கள் மற்றும் பங்கேற்பவர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். சானிடைசர் கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை தூய்மைபடுத்த வேண்டும்.
இந்த தசரா விழா நிகழ்ச்சி கன்னட தொலைக்காட்சிகள், சமூகவலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தசரா விழாவை தொடங்கி வைக்க இன்று(புதன்கிழமை) எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு செல்கிறார். காலை 11 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் அவர் சாலை மார்க்கமாக மைசூருவுக்கு செல்கிறார்.
இன்று மைசூருவில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கும் எஸ்.எம்.கிருஷ்ணா, நாளை(வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் காலை 8.45 மணி அளவில் மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில், சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜைகள் செய்து தசரா விழாவை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பசவராஜ்பொம்மை முன்னிலை வகிக்கிறார்.
தசரா விழாவை தொடங்குவதையொட்டி மைசூரு மாநகர் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. வீதிகள், அரசு கட்டிடங்கள், புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக மைசூரு மாநகரில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். அத்துடன் ட்ரோன் கேமராக்கள் உதவியுடனும் கண்காணிப்பு பணியை போலீசார் பலப்படுத்தி உள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க தசரா விழா கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டும் எளிமையாக நடந்தது. அது போல் நடப்பாண்டும் தசரா விழா எளிமையாக நடக்கிறது. அதன்படி தொடக்க விழாவில் 400 பேரும், ஜம்பு சவாரி ஊர்வலத்தில் 300 பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.