ஜுனாகத்,
2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் கடந்த 11ந்தேதியும் மற்றும் 2வது கட்ட தேர்தல் கடந்த 18ந்தேதியும் நடந்து முடிந்துள்ளது.
தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பிரசாரம், பொது கூட்டம் மற்றும் பேரணி நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இன்று 116 மக்களவை தொகுதிகளுக்கான 3வது கட்ட தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று முடிந்தது.
குஜராத்தின் ஜுனாகட் நகரில் கிர் காடு பகுதியில் வாக்கு மையம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள மையத்தில் வாக்களிக்க ஒரே ஒரு வாக்காளரே உள்ளார். பரத்தாஸ் பாபு என்ற அந்த முதியவர் இன்று தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
இதன்பின் அவர் கூறும்பொழுது, ஒரு வாக்கிற்காக இந்த வாக்கு மையத்திற்கு அரசு செலவு செய்துள்ளது. நான் வாக்கு பதிவு செய்து விட்டேன். இதனால் இந்த மையத்தில் 100 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது. அனைத்து இடங்களிலும் 100 சதவீத வாக்கு பதிவிற்கு, வாக்காளர்கள் அனைவரும் சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என நான் கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.