ஸ்ரீநகர்,
காஷ்மீரில் உள்ள குல்கம் மாவட்டத்தில் சாவல்கம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து அந்த பகுதியில் நேற்று முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது பயங்கரவாதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தத் துவங்கினர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. நீண்ட நேரம் தொடர்ந்த இந்த மோதலில் தற்போது வரை 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வரும் நிலையில், மேலும் இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.