என்சிஆர் பிராந்திய பகுதியில் அமைந்துள்ள குர்கான் நகரம் தான், உலகிலேயே காற்று மாசு அதிகம் கொண்ட நகரம் என்ற பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் இந்த முடிவு தெரிய வந்துள்ளது. இந்தப்பட்டியலில் இடம் பிடித்துள்ள முதல் 10 நகரங்களில் 7 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன என்பது கவலை தரும் அம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்தப்பட்டியலில் குர்கானை தவிர, காசியாபாத், பரிதாபாத், பிவாடி, நொய்டா, பாட்னா மற்றும் லக்னோ ஆகிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. இதைத்தவிர சீனாவின் ஹோடான் நகரமும் பாகிஸ்தானில் உள்ள லாகூர் மற்றும் பைசலாபாத் ஆகிய நகரங்களும் முதல் 10 இடங்களில் உள்ளன. இந்தப்பட்டியலில் தலைநகர் டெல்லி 11-வது இடத்தை பிடித்துள்ளது.
உலகம் முழுவதும் 3 ஆயிரம் நகரங்களில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் 64 சதவீத நகரங்கள் உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள காற்று மாசு அளவைக் குறிப்பிடும் பிஎம் 2.5க்கும் மேலாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு பிஎம் 2.5 என்ற அளவானது மனிதன் உடல் நலத்திற்கு மிகவும் அபாயகரமானது ஆகும். நுரையீரல் புற்று நோய், பக்கவாதம், மாரடைப்பு, சுவாசக்கோளாறுகள், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் வருவதற்கான அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்று மாசுவை கட்டுப்படுத்துவதில் சீனா வியக்கும் படியாக உள்ளது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங் இந்தப்பட்டியலில் 2013-ல் முதன்மையாக இருந்த நிலையில் தற்போது, பெய்ஜிங்கில் காற்று மாசு 40 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.