சண்டிகார்,
இருபெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அவர் ரோத்தக் சிறையில் அடைக்கப்பட்டார். சாமியார் குர்மீத் சிங்கிற்கு எந்தஒரு சிறப்பு வசதியும் ஏற்பாடு செய்யக்கூடாது என சிறை நிர்வாகத்திற்கு சிபிஐ கோர்ட்டு கடும் உத்தரவை பிறப்பித்து உள்ளது.
சாமியார் குர்மீத் சிங் சிறையில் 5 நாட்களாக பால், டீ மற்றும் பிஸ்கட் போன்றவற்றையே சாப்பிடுவதாக உடன் தங்கியிருக்கும் மற்றொரு கைதி சுவதேஷ் கிராத் கூறிஉள்ளார்.
பெயில் சிறையில் இருந்து வெளியே வந்து உள்ள கைதி சுவதேஷ் கிராத் பேசுகையில், சிறையில் அடைக்கப்பட்ட நாள் அன்று சாமியார் குர்மீத் சிங் தூங்கவில்லை. கடவுளே என்னுடைய தவறு என்ன என்றே சொல்லிக்கொண்டு இருந்தார். தண்டனை அறிவிக்கப்பட்டதும், மண்டியிட்ட குர்மீத் சிங் என்னை தூக்கிலிடுங்கள், நான் இதற்குமேல் உயிர்வாழ விரும்பவில்லை என்று கூறினார், என்றார். சிறையில் சாமியார் குர்மீத் சிங்கிற்கு விஐபி வசதிகள் எதுவும் கிடையாது, மற்ற கைதிகளை போன்றே சாமியாரும் நடத்தப்படுகிறார் என குறிப்பிட்டார்.
சாமியார் குர்மீத் சிங் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் வன்முறையில் நேரிட்ட உயிரிழப்புகளால் பிற கைதிகள் கோபம் கொண்டு உள்ளனர் என சுவதேஷ் கூறிஉள்ளார்.