அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் பிரபலமாக விளங்கி வரும் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரகீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.
குர்மீத் சிங் குற்றவாளி என தீர்ப்பு வெளியானதும் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 36 பேர் பலியானார்கள்.
இந்த கலவரம் பின்னர் மெல்ல மெல்ல பஞ்சாப், அரியானா மாநிலங்களின் பிற பகுதிகளுக்கும் பரவியது. அத்துடன் நிற்காமல் டெல்லி, ராஜஸ்தான் போன்ற அண்டை மாநிலங்களையும் பதம் பார்த்தது. பல பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
அரியானாவில் பல இடங்களில் தாக்குதலில் ஈடுபட்ட 524 தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் குர்மீத் ராம் ரகீம் சிங்கிற்கு நெருக்கமானவர்கள் மற்றும் கலவரத்தை தூண்டியவர்கள் என 43 பேரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்து உள்ளனர்.
அரியான போலீசார் அவர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளனர். இந்த நிலையில் குர்மீத் ராம் ரகீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் நேபாளத்தின் தரான்-இத்திரி பகுதியில் காணப்பட்டதாக இன்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் சன்சாரா-மொராங் மாவட்டத்தில் மறைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உதய்பூரில் கடந்த சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்ட தேராசசா உதவியாளர் பிரதீப் கோயல், போலீசாரிடம் , ஹனிபிரித் இந்தியாவில் இல்லை, நேபாளத்திற்கு தப்பி சென்று விட்டதாக கூறி உள்ளார்.