அதிகாரிகள் துன்புறுத்தல்
புனேயில் லோக்மான்யா திலக் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் சீரம் நிறுவன சேர்மன் சைரஸ் பூனவாலாவுக்கு லோக்மான்யா திலக் தேசிய விருது வழங்கப்பட்டது.
விழாவில் அவர் பேசியதாவது:-
சீரம் நிறுவனம் 1966-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன் தொழிற்சாலைகள் அடிப்படை கட்டமைப்பான மின்இணைப்பு, தண்ணீர் வசதிக்கு அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதே மிகவும் கடினமாக இருந்தது. தொழில்துறை அதிகாரிகளின் துன்புறுத்தலை சந்திக்க வேண்டியது இருந்தது. நான் இதை சொல்ல கூடாது, போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு கூட மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. இதனால் எனது ஊழியர்கள், சக இயக்குனர்கள் பெரும் சவாலை சந்தித்தனர்.
காலில் விழ வேண்டிய நிலை
அந்த நீண்ட பயணம், வேதனையான ஒன்று. அதற்கு தற்போது பலன் கிடைக்கிறது. அனுமதி பெற நான் அதிகாரிகள், மருந்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பலரின் காலில் கூட விழ வேண்டிய நிலையில் இருந்தேன்.ஆனால் தற்போது மோடி அரசில் அனுமதி கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் குறைந்து உள்ளன. லைசன்ஸ் ராஜ்ஜியமும் குறைந்து உள்ளது. அதனால் தான் கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய விரைவாக எங்களுக்கு அனுமதி கிடைத்தது.தற்போது மருந்து கட்டுப்பாட்டாளர் மாலை அலுவலக நேரம் முடிந்தும் கூட நமக்கு பதில் அளிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.