புதுடெல்லி,
டெல்லியில் ஜனாதிபதி மாளிகை மற்றும் இந்தியா கேட் பகுதிக்கு இடையிலான ராஜபாதையின் மறு சீரமைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து அத்திட்டத்திற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
இதன்படி மத்திய அரசின் சென்டிரல் விஸ்டா திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுவதுடன், டெல்லியில் ஜனாதிபதி மாளிகை மற்றும் இந்தியா கேட் இடையில் உள்ள 3 கி.மீ. தூர ராஜபாதையும் மறுசீரமைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவின்போது இந்த ராஜபாதையில்தான் அணிவகுப்பு நடைபெறும். இந்த திட்டத்தின் கீழ் ராஜபாதையில் பெரியளவில் கற்கள் பதிப்பது, சுரங்கபாதை வசதி, தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ராஜபாதை மறுசீரமைப்பு பணியை ஷாபூர்ஜி பல்லோனி நிறுவனம் ரூ.477.08 கோடி மதிப்பீட்டில் செய்கிறது.
இந்நிலையில் ராஜபாதையை மறுசீரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழா இந்தியா கேட் புல்வெளியில் நேற்று நடந்தது. இதில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி பங்கேற்று அடிக்கல் நாட்டினார். ராஜபாதை மறுசீரமைப்பு பணியை 2022-ம் ஆண்டு குடியரசு தினத்துக்குள் முடித்து அந்த ஆண்டு குடியரசு தினவிழா அணிவகுப்பை புதுப்பிக்கப்பட்ட ராஜபாதையில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.