தேசிய செய்திகள்

தமிழகம், கேரளா உள்பட நாடு முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

வடகிழக்கு இந்தியாவிலுள்ள பல பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்ய கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் அருணாசல பிரதேசம் மற்றும் தமிழகத்தில் கனமழை பெய்துள்ளது. இது 7 செ.மீ. முதல் 11 செ.மீ. வரை பதிவாகி இருந்தது என தெரிவித்து உள்ளது.

இதுதவிர்த்து, மேற்கு திசை காற்று மாறுபாட்டால், நாடு முழுவதும் வரவிருக்கிற நாட்களில் புதிதாக கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த வாரத்தில் வடகிழக்கு இந்தியாவில், இரண்டு மேற்கு திசை காற்று மாறுபாடுக்கான சாத்தியம் உள்ளது. இதில், 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் கனமழையும், 7-ந்தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய கூடும்.

வடகிழக்கு இந்தியாவிலுள்ள பல பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்ய கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அப்போது மணிக்கு 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வரை பலத்த காற்றும் வீச கூடும்.

இதன்படி, அருணாசல பிரதேசத்தில் 5, 6, 8 மற்றும் 9 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், அசாம், மேகாலயாவில் 7,9 மற்றும் 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய கூடும்.

இதுதவிர, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால், கேரளா, மாஹி, கடலோர ஆந்திர பிரதேசம், ஏனாம், ராயலசீமா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும். 5, 6 ஆகிய நாட்களில் தமிழகத்தின் சில பகுதிகள், கடலோர ஆந்திர பிரதேசம், ஏனாம், கேரளா, மாஹி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.