மும்பை,
வங்க கடலில் உருவான குலாப் புயல் காரணமாக மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. எனினும் மழை காரணமாக பொது மக்களுக்கு பெரியளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
இதே போல தானே, நவிமும்பை பகுதியிலும் நேற்று பலத்த மழை பெய்தது. தானேவில் மழைக்காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் நகா பகுதியில் 6.8 செ.மீ.யும், மேற்கு புறநகரில் 6.5 செ.மீ.யும், கிழக்கு புறநகரில் 7.1 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் மும்பை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஹோசாலிகர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திரா, ஒடிசா இடையே கரையை கடந்த குலாப் புயலின் தாக்கம் தற்போது வரை தொடருவதால் மும்பை, மாரத்வாடா, மத்திய பிரதேசம், கொங்கன், பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்யும் என்று தெரிவித்தார். அதன்படி மும்பை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.