தேசிய செய்திகள்

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: இங்கிலாந்து இடைத்தரகருக்கு 5 நாள் சி.பி.ஐ. காவல் - டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவு

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில், இங்கிலாந்து இடைத்தரகரை 5 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெல் நேற்று டெல்லி தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது உயர் பதவியில் இருக்கும் முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்காக இந்திய விமானப்படைக்கு இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடிக்கு 12 ஹெலிகாப்டர்கள் வாங்க கடந்த 2010-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டதில் ரூ.423 ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

விசாரணையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் மிசெல் (வயது 54) மற்றும் கியூடோ ஹச்கே, கார்லோ ஜெரோசா ஆகியோர் இடைத்தரகர்களாக செயல்பட்டதும் தெரியவந்தது.

இந்த வழக்கில் அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், கிறிஸ்டியன் மிசெல் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.225 கோடி லஞ்சமாக பெற்றதாக கூறப்பட்டு இருந்தது.

கடந்த 5 ஆண்டுகளாக துபாயில் வசித்து வந்த இவரை, விசாரணைக்காக நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் கோர்ட்டு உத்தரவிட்டது.

கோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கிறிஸ்டியன் மிசெல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் பயணம் செய்த விமானம் நேற்று முன்தினம் இரவு 10.35 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தது. டெல்லி வந்ததும் கிறிஸ்டியன் மிசெலை சி.பி.ஐ. அதிகாரிகள் முறைப்படி கைது செய்தனர்.

இந்த ஊழல் வழக்கை விசாரித்து வரும் டெல்லியில் உள்ள தனிக்கோர்ட்டில் நேற்று நீதிபதி அரவிந்த் குமார் முன்பு கிறிஸ்டியன் மிசெலை சி.பி.ஐ. போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது கிறிஸ்டியன் மிசெலும், அவரது வக்கீலும் 5 நிமிடம் பேசிக்கொள்ள நீதிபதி அனுமதி வழங்கினார். பின்னர், கிறிஸ்டியன் மிசெலை கோர்ட்டு காவலில் வைக்குமாறு அவரது வக்கீல் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல், அவரை 14 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிறிஸ்டியன் மிசெலை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

கிறிஸ்டியன் மிசெல் சார்பில் ஜாமீன் கேட்டு நேற்று தனிக்கோர்ட்டில் அவரது வக்கீல் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீது எப்போது விசாரணை நடைபெறும் என்பது பற்றி நீதிபதி எதுவும் தெரிவிக்கவில்லை.

தனிக்கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, கிறிஸ்டியன் மிசெல் சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கிறிஸ்டியன் மிசெல் நேற்று தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுமர்பூர் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கிறிஸ்டியன் மிசெல் நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு இருப்பது பற்றி தெரிவித்தார். கிறிஸ்டியன் மிசெலிடம் நடத்தப்படும் விசாரணையின் மூலம் ஹெலிகாப்டர் பேர ஊழல் ரகசியங்கள் அம்பலமாகும் என்றார்.


நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது