புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2026-2027-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பாக 7 புல்லட் ரெயில் பாதைகள் இடம் பெற்றிருந்தன. அதில் சென்னையும் இடம் பெற்றுள்ளது. அதாவது, சென்னை - பெங்களூரு, சென்னை - ஐதராபாத், பெங்களூரு - ஐதராபாத், ஐதராபாத் - புனே, புனே - மும்பை, சிலிகுரி - வாரணாசி, வாரணாசி - டெல்லி ஆகிய 7 வழித்தடங்கள்தான் அவை.
இதில், சிலிகுரி என்பது மேற்கு வங்காளத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் அமைந்துள்ள இடமாகும். இந்த ஊர்களுக்கு இடையேதான் 7 புல்லட் ரெயில் பாதைகள் அமைய இருக்கின்றன. இதன் மொத்த நீளம் 4 ஆயிரம் கிலோ மீட்டர் ஆகும். இதற்காக, மத்திய பட்ஜெட்டில் ரூ.16 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அதிவேக ரெயில் பாதை திட்டம் விரைவாக நிறைவேறினால், சென்னையில் இருந்து 354 கி.மீ. தூரத்தில் உள்ள பெங்களூருவை 1 மணி நேரம் 13 நிமிடத்தில் அடைய முடியும்.
தற்போது இந்த வழித்தடத்தில் அதிவேகமாக செல்லும் ரெயிலாக ‘வந்தே பாரத்’ உள்ளது. மணிக்கு 130 கி.மீ. முதல் 160 கி.மீ. வரையிலான வேகத்தில் செல்லும் இந்த ரெயில், சென்னையில் இருந்து பெங்களூருவை 4 மணி நேரம் 10 நிமிடத்தில் கடக்கிறது. சென்னை - பெங்களூரு இடையே புல்லட் ரெயில் இயக்கப்படும்போது, பயண நேரம் 3 மணி நேரம் குறையும்.
இதேபோல், 694 கி.மீ. தூரம் கொண்ட சென்னை - ஐதராபாத் ரெயில்வே வழித்தடத்தில் தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்கள் குறிப்பிட்ட தூரத்தை கடக்க 12 மணி நேரம் 25 நிமிடங்கள் ஆகிறது. சென்னை - ஐதராபாத் இடையே புல்லட் ரெயில் இயக்கப்பட்டால், 2 மணி நேரம் 55 நிமிடங்களில் விரைவாக செல்ல முடியும். அதாவது, 9 மணி நேரம் 30 நிமிடங்கள் மிச்சப்படும்.
இந்நிலையில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ. 35,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு 2 புல்லட் ரெயில்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சில ரெயில் திட்டங்களுக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை” என்று தெரிவித்தார்.