சிம்லா,
குஜராத், இமாசலபிரதேச மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று உள்ளது.
இமாசலபிரதேசத்தில் காங்கிரஸ் வசம் இருந்த ஆட்சியை பா.ஜனதா தட்டிப்பறித்துள்ளது. ஆட்சிக்கு எதிரான அலை வீசியதால் காங்கிரஸ் கட்சியால் 21 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றாலும் முதல்-மந்திரி வேட்பாளர் பிரேம் குமார் துமால் தோல்வியை தழுவினார். சுஜான்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜிந்தர் ரானாவிடம் தோல்வியை தழுவினார் பிரேம் குமார் துமால். பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றாலும் துமால் தோல்வியானது அக்கட்சிக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
பிரேம் குமார் துமாலின் தீவிர ஆதரவாளர்கள் என கருதப்படும் குலாப் சிங், ரவீந்தர்சிங் ரவி, மாநில பாரதீய ஜனதா தலைவர் சத்பால் சிங் சாட்டி, ரன்திர் சர்மா, கே.எல். தாக்குர், விஜய் அக்னிகோத்ரி ஆகியோரும் தோல்வியையே தழுவினர். இந்நிலையில் இமாசலபிரதேசத்தில் முதல்மந்திரி பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்து உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-மந்திரி தேர்வு செய்யப்படுகிறார். மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், நரிந்தர் தோமர் ஆகியோர் மேற்பார்வையில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
புதிய முதல்மந்திரி பதவிக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா பெயர் பலமாக அடிபடுகிறது. அதே நேரத்தில் 7வது முறை வென்றுள்ள மொகிந்தர் சிங், 5வது முறை வெற்றி பெற்ற ராஜீவ் பிந்தால், 4வது முறை வெற்றி பெற்றிருக்கிற மாநில பாரதீய ஜனதா முன்னாள் தலைவர் சுரேஷ் பரத்வாஜ் மற்றும் கிருஷன் கபூர் ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன. இமாசல பிரதேச மாநிலத்தில் பிரேம் குமார் துமால் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே அவ்வரிசையில் முதன்மையாக இருந்தவர் ஜே.பி.நட்டா.
இருப்பினும் தேர்தலை பிரேம் குமார் துமால் தலைமையில் சந்தித்ததால் அவரையே முதல்-மந்திரியாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகிறது, ஆனால் தோல்வியை தழுவியவரை முதல்மந்திரி பதவியில் அமர்த்துவதற்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்காது எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே யார் அடுத்த முதல்-மந்திரி என்ற போட்டியில் பா.ஜனதாவின் மற்றொரு தலைவர் ஜெய்ராம் தாகூர் பெயரும் முன்னிலை பெறுகிறது. ஜெய்ராம் தாகூருக்கு கட்சியிலும், ஆட்சியிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளது, மேலும் அவருக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவும் இருக்கிறது. எனவே முதல்-மந்திரி யார்? என்ற போட்டியில் ஜே.பி. நட்டா மற்றும் ஜெய்ராம் தாகூர் பெயர்களே முன்னணியில் உள்ளது. ஜே.பி. நட்டாவுக்கு, இமாசல பிரதேச முதல்மந்திரி நாற்காலி கிடைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.