தேசிய செய்திகள்

இமாச்சலப்பிரதேசத்தில் ஜூன் 7-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

இமாச்சலப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜூன் 7-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

சிம்லா,

கொரோனாவின் 2-வது அலை அச்சுறுத்தல் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க முழு ஊரடங்கு தான் தீர்வு என்று மருத்துவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கை கொண்டு வந்துள்ளனர். இதுவரை 16 மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இமாச்சலபிரதேசத்தில் மே 31 தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை மேலும் ஒரு வாரம் அதாவது ஜூன் 7-ந் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கில் சிறிய தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகளும் மே 31 முதல் வாரத்தில் 5 நாட்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும். அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் 30% வருகையுடன் செயல்படும். கல்வி நிறுவனம் ஜூன் 5 வரை மூடப்படும் மேலும் பொது போக்குவரத்தும் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,87,342 ஆக உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் 18,495 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.