சிம்லா,
கொரோனா வைரஸ் என்னும் கொலைகார வைரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்துகட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த 3-ந் தேதி ஒப்புதல் அளித்தது.
அதைத் தொடர்ந்து இந்தியாவில் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வருகிற 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடப்படுகிறது. முதலில் டாக்டர்கள், நர்சுகள், முன்கள பணியாளர்கள் என 3 கோடி பேருக்கும், அவர்களை தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்குட்பட்ட நாள்பட்ட நோயாளிகள் என 27 கோடி பேருக்கும் தடுப்புசி முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்படுகிறது. இதற்காக ஏற்கனவே 2 கட்ட ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவிற்கு முதல் கட்டமாக மத்திய அரசு ஒதுக்கிய 93,000 கொரோனா தடுப்பூசிகள் இன்று வந்தடைந்தன. பின்னர் அவை பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டு மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.