தேசிய செய்திகள்

அநாதையான சிறுமியை ஆளாக்கி இந்து முறையில் திருமணம்; முஸ்லிம் நபரின் நல்லிணக்கம்

கர்நாடகாவில் மத நல்லிணக்க எடுத்துக்காட்டாக உறவினர்கள் கைவிட்ட சிறுமியை முஸ்லிம் நபர் வளர்த்து, ஆளாக்கி இந்து முறையில் திருமணம் செய்து வைத்துள்ளார்.

விஜயப்புரா,

கர்நாடகாவின் விஜயப்புராவில் சமீபத்தில் இந்து மத முறைப்படி திருமணம் நடந்தது. இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா...? இந்து மத பெண்ணான பூஜா வடிகேரி (வயது 18) 10 ஆண்டுகளுக்கு முன் அனாதையானார்.

அவரை வளர்த்து ஆளாக்க அவரது உறவினர்கள் மறுத்து விட்டனர். இந்நிலையில், மெஹ்பூப் மஸ்லி என்பவர் அந்த சிறுமியை தனது பராமரிப்பில் வளர்க்க தொடங்கினார். மஸ்லிக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், திருமண வயது வந்த அந்த சிறுமிக்கு இந்து மத முறைப்படி, மணமகனை தேடி பிடித்து திருமணம் செய்யும் முயற்சியில் வெற்றி பெற்று உள்ளார். மணமகன் வீட்டினர் வரதட்சணை இன்றி மகிழ்ச்சியுடன் திருமணத்திற்கு ஒத்து கொண்டனர்.

திருமணம் முடிந்த பின்பு மஸ்லி கூறும்போது, 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த சிறுமி எனது வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். எங்களுடைய மதத்திற்கு (இஸ்லாமிய மதம்) வரவோ அல்லது முஸ்லிம் நபரை திருமணம் செய்யவோ நான் ஒருபோதும் கட்டாயப்படுத்தியது இல்லை.

எங்களுடைய மத கொள்கைகளுக்கு அது எதிரானது. சமூகம் வேறாக இருப்பினும் மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். அதற்கான செய்தியை சமூகத்திற்கு அளிக்கவே நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

சமூக நல்லிணக்கம் மற்றும் பல சமூக சேவைகளை அந்த பகுதியில் மஸ்லி செய்து பிரபலம் அடைந்தவர். நகரில் கணபதி திருவிழாக்களையும் நடத்தியவர். இதுபோன்ற நல்லுள்ளம் கொண்ட பெற்றோர் கிடைத்து, கடவுளின் ஆசியை அதிகம் பெற்றுள்ளேன் என பூஜா தெரிவித்து உள்ளார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி