பஞ்சகுலா,
அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் பிரபலமாக விளங்கி வரும் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரகீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.
குர்மீத் சிங் குற்றவாளி என தீர்ப்பு வெளியானதும் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 36 பேர் பலியானார்கள்.
இந்த கலவரம் பின்னர் மெல்ல மெல்ல பஞ்சாப், அரியானா மாநிலங்களின் பிற பகுதிகளுக்கும் பரவியது. அத்துடன் நிற்காமல் டெல்லி, ராஜஸ்தான் போன்ற அண்டை மாநிலங்களையும் பதம் பார்த்தது. பல பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.அரியானாவில் பல இடங்களில் தாக்குதலில் ஈடுபட்ட 524 தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில், சாமியாரின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், அக்டோபர் 3ம் தேதி கைது செய்தனர். கலவரம் தொடர்பாக சாமியாரின் கார் டிரைவர் ராகேஷ் குமார் என்பவரை செப்டம்பர் 27 ல் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி தேரா சச்சா அமைப்பின் பஞ்சாகுலா மாவட்ட தலைவர் சம்கவுர் சிங்கிடம் ரூ.1.25 கோடி பணத்தை ஹனிபிரீத் வன்முறையை தூண்டுவதற்காக கொடுத்ததாக கூறியுள்ளார்.