தேசிய செய்திகள்

கவுரவ கொலையால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா பெண்ணை சந்தித்தார், கவுசல்யா

கவுரவ கொலையால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா பெண் அம்ருதாவை கவுசல்யா சந்தித்து பேசினார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சங்கர் (வயது 22) கடந்த 2016ம் ஆண்டு கூலிப்படையால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவருடைய காதல் மனைவி கவுசல்யாவையும் அந்த கும்பல் வெட்டியது.

பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. படுகாயம் அடைந்த கவுசல்யா சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறினார். இது தொடர்பாக கவுசல்யா வழக்கு தொடர்ந்தார். இந்த கவுரவ கொலை வழக்கில் அவருடைய தந்தை உள்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சாதீய அநீதிகளுக்கு எதிராக கவுசல்யா குரல் கொடுத்து வருகிறார்.

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட அம்ருதா கண் முன்னே அவருடைய காதல் கணவர் பிரனய்குமார் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கவுரவ கொலை வழக்கில் அம்ருதாவின் தந்தை, சித்தப்பா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

கர்ப்பிணியான அம்ருதா தற்போது பிரனய்குமாரின் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அவரை, கவுசல்யா சந்தித்து பேசினார். அப்போது சங்கர் படுகொலை செய்யப்பட்ட வீடியோவை காண்பித்து, தனக்கு நேர்ந்த கொடூரத்தை கவுசல்யா விளக்கினார். கவுசல்யா தன்னுடன் வக்கீலையும் அழைத்து சென்று இருந்தார்.

இந்த சந்திப்பின்போது, சங்கர் கொலை வழக்கில் 58 முறை தன் பெற்றோரின் ஜாமீன் மனுவை எதிர்த்தேன், 6 பேருக்கு தூக்கு தண்டனை கிடைக்க போராடினேன் என கவுசல்யா கூறினார்.

இதை அனைத்தையும் கேட்ட அம்ருதா, தன் காதல் கணவர் கொலைக்கு காரணமான அனைவரையும் தூக்கில் போட வேண்டும். என் சித்தப்பா வெளியே வந்தால் எனக்கும், என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என அச்சம் தெரிவித்தார்.

நீங்கள் கோர்ட்டில் நடந்ததை கூறுங்கள், கொலைக்கு காரணமானவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என கவுசல்யா ஆறுதல் கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு