துப்குரி,
மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் துப்குரி சுகாதார மையத்தில் ஒரு கொரோனா தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று காலையில் இந்த தடுப்பூசி மையத்தை திறந்ததும், அங்கு கூடியிருந்த மக்கள், தடுப்பூசி டோக்கன் பெற்று விடுவதற்காக முண்டியடித்துக் கொண்டு சென்றனர்.
இதனால் ஏற்பட்ட நெரிசலில் சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் பலர் பெண்கள் ஆவர். 4 பேர் பலத்த காயங்களுடன் ஜல்பைகுரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தடுப்பூசி பற்றாக்குறை இருந்ததால், பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு தடுப்பூசி மையத்திற்குள் சென்றதாகவும், சமூக இடைவெளி விதிமுறை காற்றில் பறக்கவிடப்பட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்தை தொடர்ந்து அந்த மையத்தில் தடுப்பூசி திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.