புதுடெல்லி,
நம்மூரில் கழுதை கெட்டால் குட்டி சுவர், கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம்? போன்ற பழமொழிகள் வழக்கில் உள்ளன. ஆனால், சமீப காலங்களாக அந்த கழுதை இனம் நாட்டில் அழிவை சந்தித்து வருகிறது.
இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்ட சர்வதேச தொண்டு அமைப்பொன்று இதுபற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதில், கடந்த 2012ம் ஆண்டில் இருந்து 2019ம் ஆண்டு வரையில் கழுதைகளின் எண்ணிக்கை 61 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
அவற்றின் பயன்பாடு குறைந்தது, திருடப்படுதல், இறைச்சிக்காக சட்டவிரோத வேட்டையாடுதல் மற்றும் மேய்ச்சல் நிலம் குறைவு ஆகியவை இதற்கான காரணங்களாக அறியப்படுகிறது.
இதுபற்றிய கள ஆய்வில், மராட்டியம், குஜராத், பீகார், ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெருமளவில் கழுதைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஒரு காலத்தில் மக்களை சுமந்து செல்ல, பொருட்களை ஓரிடத்திற்கு கொண்டு செல்ல என பொது நோக்க பயன்பாட்டிற்கு இருந்த கழுதைகள், தோலுக்காக பிற நாடுகளுக்கு கடத்தப்படும் அவலம் தெரிய வந்துள்ளது.
அவற்றில், சீனாவில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க கழுதை தோல் தேவையாக உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், சீனர் ஒருவர் 2 ஆண்டுகளுக்கு முன், மாதம் ஒன்றிற்கு 200 கழுதைகள் வேண்டும் என உள்ளூர் கழுதை வியாபாரியை அணுகியுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.