தேசிய செய்திகள்

பாலியல் உறவுக்கு மறுத்த மனைவியை 2-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய கணவன்

வீடு திரும்பிய முகேஷ், தனது மனைவி தீஜாவை கட்டாயப்படுத்தி அவருடன் பாலியல் உறவு கொள்ள முயற்சித்துள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ் அகிர்வார். இவருக்கும் தீஜா என்ற பெண்ணுக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களது இல்லற வாழ்க்கை சுமார் ஓராண்டுக்கு நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், அதன் பிற்கு முகேஷின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது.

பலமுறை இரவு நேரங்களில் முகேஷ் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். இது குறித்து தீஜா கேட்டபோது அவரை திட்டி, கடுமையாக தாக்கியுள்ளார். இதே போல் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றுவிட்டு நீண்ட நேரத்திற்கு பிறகு வீடு திரும்பிய முகேஷ், தனது மனைவி தீஜாவை கட்டாயப்படுத்தி அவருடன் பாலியல் உறவு கொள்ள முயற்சி செய்துள்ளார்.

ஆனால் தீஜா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த முகேஷ், தனது மனைவியை தூக்கிச் சென்று வீட்டின் 2-வது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார். தீஜாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது அவர் பலத்த காயங்களுடன் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவர்கள் தீஜாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது தீஜாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தீஜா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.