லக்னோ,
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டுகிறது.
இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் நிறுவன தலைவரான முலாயம் சிங்கின் இளைய மருமகள் அபர்னா யாதவ் இன்று பாஜகவில் இணைந்தார். இந்த நிகழ்வு தேர்தலில் சமாஜ்வாதிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்ற அபர்னா யாதவ் அங்கு மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அபர்னா யாதவ், நான் பாஜகவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு முதலில் நாடு தான் முக்கியம். பிரதமர் மோடியின் பணிகளால் ஈர்க்கப்பட்டேன் என்றார்.
அபர்னா யாதவ் வரும் சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.