தேசிய செய்திகள்

கடுமையான நோயுடன் துணிவுடன் போராடியவர்: பாரிக்கர் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்

கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கடுமையான நோயுடன் துணிவுடன் போராடியவர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பானஜி,

கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் (வயது 63), நீண்ட காலமாக கணைய புற்று நோயால் அவதியுற்று வந்தார். இதற்காக அவர் முதலில் கோவாவில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் அமெரிக்காவில் உயர் சிகிச்சை பெற்றார். அதைத் தொடர்ந்து நாடு திரும்பிய அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடைசியாக அவர் கோவாவில் உள்ள தனது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக முதல்-மந்திரி அலுவலகம் நேற்று டுவிட்டரில் செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அவரது வீட்டுக்கு உறவினர்கள் வந்து குவிந்தனர்.ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் மரணம் அடைந்தார்.

கோவா முதல்-மந்திரியாக 2000-2005, 2012-2014 காலகட்டங்களில் மனோகர் பாரிக்கர் பதவி வகித்தார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபையில் 2014-2017 கால கட்டத்தில் மத்திய ராணுவ மந்திரியாக பதவி வகித்தார். பின்னர் மறுபடியும் கோவா முதல்-மந்திரியாக 3-வது முறையாக பதவி ஏற்றார். கோவா சட்டசபையில் கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு, மூக்கில் குழாய்கள் சொருகிய நிலையில் மனோகர் பாரிக்கர் பட்ஜெட் தாக்கல் செய்து பேசினார்.

அப்போது அவர், நான் மகிழ்ச்சியுடனும், முழு உணர்வுகளுடனும் உள்ளேன். என் கடைசி மூச்சு உள்ளவரை கோவா மாநிலத்துக்காக உழைப்பேன் என கூறியது நினைவுகூரத்தக்கது. இவரது மனைவி மேதா ஏற்கனவே கடந்த 2001-ம் ஆண்டு மரணம் அடைந்து விட்டார். இந்த தம்பதியருக்கு உத்பால், அபிஜித் என்று 2 மகன்கள் உள்ளனர்.

மனோகர் பாரிக்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, நிதின் கட்காரி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மனோகர் பாரிக்கர் மறைவையொட்டி இன்று (திங்கட்கிழமை) தேசிய துக்க நாளாக அனுசரிக்கப்பட்டு உள்ளது. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், கட்சி பாகுபாடுகளை கடந்து அனைவராலும் மதிக்கப்பட்டவர் மனோகர் பாரிக்கர். கடுமையான ஒரு நோயுடன் துணிவுடன் போராடினார். கோவாவின் தவப்புதல்வர்களில் அவரும் ஒருவர் என தெரிவித்துள்ளார்.

கட்சி பாகுபடின்றி அனைவராலும் மதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர், மறைவுக்கு சமூக வலைதளங்களில் அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர். மனோகர் பாரிக்கர் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை பானஜியில் உள்ள கலா அகடமியில் வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு 5 மணிக்கு மனோகர் பாரிக்கர் உடல் தகனம் செய்யப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது