மத்திய அரசு கண்டனம்
வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து விவசாய சங்கங்கள் நடத்தி வரும் போராட்டத்தை சர்வதேச பிரபலங்கள் சிலர் ஆதரித்துள்ளனர். அமொக்க பாடகி ரிஹானா, சுவீடன் நாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், ஆபாசப்பட நடிகை மியா காலிபா உள்ளிட்டோர் ஆதரவு குரல் கொடுத்தனர். அவர்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.
இந்தநிலையில், விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் பாரதீய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத், போராட்டம் நடந்து வரும் காசிப்பூர் எல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஆதரிப்பதால் என்ன பிரச்சினை?
அப்போது, சர்வதேச பிரபலங்கள் குறித்து கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
சர்வதேச பிரபலங்களின் ஆதரவை வரவேற்கிறோம். அவர்கள் ஆதரித்தாலும், அவர்கள் யார் என்றே எனக்கு தெரியாது.அவர்கள் ஆதரிப்பதால் என்ன பிரச்சினை? அவர்கள் எங்களுக்கு ஒன்றும் கொடுக்கப் போவதில்லை. எங்களிடம் இருந்து எதுவும் எடுத்துச் செல்லப்போவதும் இல்லை.
எம்.பி.க்கள் தர்ணா
விவசாயிகளை பார்க்க காசிப்பூருக்கு வந்த 15 எம்.பி.க்கள் தடுக்கப்பட்டுள்ளனர். நான் அவர்களிடம் பேசவும் இல்லை. எங்களிடம் பேச அவர்கள் அனுமதிக்கப்படவும் இல்லை. போலீஸ் தடுப்புகளுக்கு அப்பால் அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா செய்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.