தேசிய செய்திகள்

இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாம்- அசாதுதீன் ஒவைசி திட்டவட்டம்

மரணத்திற்கு நான் அஞ்சுபவன் அல்ல, எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாம் என ஓவைசி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐதராபாத்,

அனைத்து இந்திய மஜ்லிஸ் இ-இதயத்துல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, ஐதராபாத் தொகுதி எம்.பி.ஆகவும் உள்ளார். இவர் சட்டசபை தேர்தலையொட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக உத்தரபிரதேசம் சென்றிருந்தார்.

நிகழ்ச்சிக்குப் பின் அவர் டெல்லி சென்று கொண்டிருந்தபோது அவரது கார் மீது மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட ஓவைசி, தனது காரில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த இடத்தையும் பகிர்ந்து இருந்தார். ஓவைசியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஓவைசிக்கு மத்திய ரிசர்வ் காவல் படையின் இசட் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஓவைசியை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவரின் பெயர் சச்சின் என்றும் நொய்டாவை சேர்ந்த அவரின் மீது ஏற்கெனவே கொலை வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சட்டப்படிப்பை முடித்துள்ளதாக அவர் தெரிவித்த நிலையில், அதை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்து வலதுசாரி அமைப்பின் உறுப்பினராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரின் பெயர் சுபம் என்பதும் அவர் சஹாரன்பூரை சேர்ந்த விவசாயி என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின்போது, ஓவைசி மற்றும் அவரது சகோதரர் அக்பரூதின் ஓவைசி ஆகியோரின் கருத்து தங்களை கோப்படுத்தியதாக கூறியுள்ளனர். இருவரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில், தனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாம் என நிராகரித்துள்ள ஓவைசி, குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு