புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வருகை தந்துள்ளார். அவர் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார்.
இதற்காக நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த அவரை பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நாடாளுமன்ற விவகார துறை மந்திரி அனந்தகுமார் உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த கூட்டத்தில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவும் கலந்து கொள்கிறார்.
அதற்கு முன், கூட்டத்தொடர் சுமுக முறையில் நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையாற்றி வருகிறார். அவர், பொருளாதார மற்றும் சமூக ஜனநாயகம் இன்றி அரசியல் ஜனநாயகம் நிலைபெறாது என பாபா சாகேப் அம்பேத்கார் கூறுவது வழக்கம் என கூறி தனது உரையை தொடங்கினார்.
தொடர்ந்து அவர், முத்தலாக் மசோதா நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன். இந்த மசோதா இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்.
அரசானது ஏழைகள் மற்றும் வங்கிகள் இடையே உள்ள இடைவெளியை குறைத்துள்ளது. பெண்களுக்கு பேறுகால சலுகைகளை அரசு அதிகளவில் அளித்துள்ளது. மகளிர் சுயஉதவி குழுக்களை அரசு ஊக்குவித்து வருகிறது.
முன்னேறுவதற்கான வாய்ப்பினை ஏழைகள் பெற்று வருகின்றனர். விவசாயிகளின் வருவாயை 2022ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது என உரையாற்றியுள்ளார்.
#Parliament #tripletalaq #Budgetsession #PM #Modi