புதுடெல்லி,
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் ஆயிரக்கணக்கான பாடல் களை பாடியவர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவருக்கு வயது 74. கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு காய்ச்சல் குறைந்தது. 2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன் என்று அவர் கூறினார்.
இந்த நிலையில், கடந்த 13-ந்தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமானது. அவரது உடல்நிலையை தீவிர சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று அரசியல் தலைவர்கள், திரை உலக நட்சத்திரங்கள் என அனைத்து தரப்பினரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- அனைவராலும் ரசிக்கப்படும் பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைவில் உடல் நலம் தேறவும் நல்ல ஆரோக்கியம் பெறவும் நான் பிரார்த்திக்கிறேன்.
கொரோனாவுக்கு எதிராக களத்தில் நின்று பணியாற்றும் முன்கள பணியாளர்கள் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்ட போது, அவர்களின் மன உறுதியை ஊக்கப்படுத்தும் வகையில் இதயத்தை தொடும் பாடலை வீடியோவாக எஸ்.பி.பால சுப்பிரமணியம் வெளியிட்டார் என்று பதிவிட்டுள்ளார்.