ஐதராபாத்,
துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கையா நாயுடு, இந்த பொறுப்பில் இருந்து கொண்டு அரசியல் பற்றி பேசக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், மக்கள் பிரச்சினைகளுக்கு நான் குரல் கொடுக்க மாட்டேன் என்று இதன்மூலம் அர்த்தமாகாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடிய வெங்கையா நாயுடு கூறியதாவது:- இந்த பொறுப்பில்(துணை ஜனாதிபதி) இருந்து கொண்டு நான் அரசியல் பேசக்கூடாது. நான் அரசியல் பேசப்போவதும் இல்லை. ஆனால், நான் அரசியல் பேச மாட்டேன் என்பதால்,மக்கள் பிரச்சினைகளுக்கோ மக்கள் நலனுக்காகவோ குரல் கொடுக்க மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. புதிய பொறுப்பில் எவ்வாறு செயல்படுவது என்பது பற்றி அதிகாரிகளுடனும் ஆலோசனை செய்து வருகிறேன்.
மாநிலங்களவை சபாநாயகராக, அவையில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற நான் கடுமையாக போராடுவேன். மசோக்களை அரசு நிறைவேற்றக்கூடிய சூழலையும் நான் உருவாக்க முயற்சிப்பேன். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களுக்கும் அவையில் பேசுவதற்கு உரிய அனுமதி அளிக்கப்படும் என்றார்.