தேசிய செய்திகள்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நான் ஆதரவு -ஓ.பி.ராவத்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நான் ஆதரவு என ஓ.பி.ராவத் கூறிஉள்ளார். #ElectionCommission #OmPrakashRawat #Aadhaar

புதுடெல்லி,

இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ஏ.கே.ஜோதியும், தேர்தல் கமிஷனர்களாக ஓம் பிரகாஷ் ராவத் (ஓ.பி.ராவத்), சுனில் அரோரா ஆகியோரும் இருந்து வந்தனர். ஏ.கே.ஜோதியின் பதவி காலம் முடிவடைவதால், அவர் இன்று (திங்கட்கிழமை) ஓய்வு பெறுகிறார். எனவே அவருக்கு பதிலாக, தேர்தல் கமிஷனர்களில் பதவிமூப்பு அடிப்படையில் ஓ.பி.ராவத்தை மத்திய அரசு புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நியமித்தது. ஓ.பி.ராவத் நாளை (செவ்வாய்க்கிழமை) தலைமை தேர்தல் கமிஷனராக பதவி ஏற்க இருக்கிறார்.

நலத்திட்ட உதவிகள், சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் எண்ணை பொதுமக்கள் இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது. இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளநிலையில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ள ஓம் பிரகாஷ் ராவத், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஆதரவை தெரிவித்து உள்ளார். ஆதார் எண்ணை மத்திய அரசு பவ்லேறு திட்டங்களுக்கு கட்டாயமாக்கி வருவதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஓம்பிரகாஷ் ராவத் தன்னுடைய ஆதரவை தெரிவித்து உள்ளார். தி எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்து பேசிஉள்ள ஓம்பிரகாஷ் ராவத், வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு முன்னதாக பயோமெட்ரிக் அடிப்படையிலான சோதனைக்கும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அணுகுமுறைக்கும் தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தி உள்ளார். இந்த அம்சத்தை ஒருங்கிணைக்க மின்னணு வாகுப்பதிவு இயந்திரங்களில் எந்தஒரு மாற்றத்தையும் மேற்கொள்ள விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டு உள்ளார். பாதுகாப்பு படையினரை போன்று வேறு மாநிலங்களுக்கு இடம்பெயரும் மக்களும் வாக்களிக்க முடியுமா என்பதை கருத்தில் கொண்டு உள்ளோம் என கூறிஉள்ளார்.

ஆதார் அடையாள எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க என்னுடைய ஆதரவை தெரிவிக்கிறேன். பயோமெட்ரிக் தரவுகள் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு நுழைவதற்கு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அணுகுவதற்கு முன்னதாக அடையாளத்தை அறிந்துக்கொள்ள உதவும். அடையாளமானது போலியானதாக இல்லாமல் இருக்கும், என கூறிஉள்ளார் ஓம்பிரகாஷ் ராவத். ஆதார் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நிலையில் ஓம்பிரகாஷ் ராவத் இத்தகைய கருத்தை தெரிவித்து உள்ளார்.