ஸ்ரீநகர்,
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டபோது ஓராண்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.இந்தநிலையில், தற்போது தன்னை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டதாக அவர் நேற்று குற்றம் சாட்டினார்.
கடந்த 27-ந் தேதி இரவு புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புகுந்த ராணுவத்தினர் அங்குள்ள வீடுகளை சூறையாடியதாகவும், ஒரு குடும்பத்தினரை அடித்து உதைத்ததாகவும் மெகபூபா முப்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த கிராமத்துக்கு செல்ல திட்டமிட்டிருந்த தன்னை தடுக்கும்விதமாக வீட்டுக்குள் வைத்து பூட்டியதாக அவர் கூறியுள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ராணுவத்தால் சூறையாடப்பட்ட கிராமத்துக்கு செல்ல முயன்றதற்காக என்னை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டனர். இதுதான் காஷ்மீரின் உண்மையான நிலவரம். வெளிநாட்டில் இருந்து வரும் பிரதிநிதிகளுக்கு இதைத்தான் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.